சென்னை: தாமிரபரணி ஆற்றிலிருந்து ஆண்டுதோறும் சராசரியாக 13 டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதால், ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி, சாத்தான்குளம் பகுதிகளுக்குக் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்காகத் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறுகளை இணைக்க 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அதை விரைவுபடுத்தத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி, தற்போதைய சபாநாயகரான மு.அப்பாவு (அப்போது திமுக எம்எல்ஏ) பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த வழக்கில் அரசு தாக்கல் செய்த அட்டவணையின்படி, பணிகளை முடிக்கும்படி 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை எனத் தமிழ்நாடு அரசுக்கு எதிராக 2017ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அப்பாவு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 1) விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், "நான்கு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் முதல் இரண்டு கட்டங்கள் முடிவடைந்துள்ளது. மூன்றாவது கட்டத்தில் 90 சதவீதமும், நான்காவது கட்டத்தில் 50 சதவீதமும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் முடிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.
அதனை ஏற்ற நீதிபதிகள், அரசு தாக்கல் செய்த அட்டவணைப்படி பணிகள் கண்காணிக்க வேண்டுமென அறிவுறுத்தல் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளதாகவும், வேறு எந்த உத்தரவும் 2015ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்படவில்லை என்பதால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாகாது எனத் தெரிவித்து, அப்பாவு தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: போஸ்டர் நீக்கத்தில் அரசின் செயல்பாடுகள் திருப்தி - உயர் நீதிமன்றம்