சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் டிச.28ம் தேதி காலையில் உயிரிழந்ததை அடுத்து, அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், தமிழ்நாட்டு மக்கள், திரையுலகினர், தேமுதிக தொண்டர்கள் என திரளானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மனிதநேய சமூதாய கட்சி மாநில தலைவர் தமீமுன் அன்சாரி பேசுகையில், "கேப்டன் விடைபெற்றுள்ள இந்த நேரத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாடும், தமிழ் மக்களும் மிகப்பெரிய சோகத்தில் இருக்கின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்டோர் இறந்த போது, எத்தகைய சோகம் தமிழ்நாட்டில் நிலவியதோ, அதேபோன்று ஒரு நிலை நிலவுகிறது என்பது உண்மை. கேப்டன் குறித்து பலரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலுக்கு முன்பாக, நானும் கேப்டனும் மலேசியா தலைகரானா கோலாம்பூரிலே சந்தித்துப் பேசும்போது, திமுக தலைமையிலான கூட்டணிக்கு கேப்டன் வர வேண்டும் என விரும்பி அவருடன் பல மணி நேரம் உரையாடினேன். அந்த நேரத்தில் மறைந்த தமிழ்நாட்டின் தலைவர்கள் காமராஜர், பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் பற்றி அவர் உயர்வான மதிப்புகளைக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில், கலைஞர் கருணாநிதியிடன் போனில் பேசலாமா எனக் கேட்டவுடன், நான் எம்.ஜி.ஆரைப் பார்த்தால் விழுந்துவிடுவேன்; கலைஞரிடம் பேசினால் விழுந்துவிடுவேன் என்று அவர்களின் மீதான அன்பை வெளிப்படுத்தினார். அவர் மிகவும் கோபக்காரர் என்ற தோற்றம் வெளிப்படையாக ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்த கோபம் குழந்தையின் கோபத்திற்கு சமமானது. யார் மீது கோபப்படுகிறாரோ அவர்மீதே பரிவு காட்டக் கூடிய பண்பாளராக வாழ்ந்து சென்றிருக்கிறார்.
விஜயகாந்த் இளம் வயதிலே இந்தி எதிர்ப்பு போராட்டதில் கலந்து கொண்டிருக்கிறார். நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது, நடிகர் நடிகைகளை ஒன்று திரட்டி, நெய்வேலியிலே காவிரி உரிமைக்காக போராட்டம் நடத்தினார். ஈழத்தமிழர்கள் மீது அவர் கொண்ட அன்பின் காரணாமாகத்தான், அவரது முதல் மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயர் சூட்டினார்.
1992 டிச.6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, பத்திரிக்கையாளர்கள் அதனைப் பற்றி கேள்வி எழுப்பினார்கள். அந்த நேரத்தில் இடிக்கப்பட்ட அந்த இடத்திலே மசூதியைக் கட்டிக் கொடுப்பதுதான் நியாயம் என்று மதச்சார்பின்மையாக பேசியவர் விஜயகாந்த். அவரை இழந்துத் தவிக்கக் கூடிய அவரது குடும்பத்தார், கட்சித் தொண்டர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கும் மனிதநேய சமூதாய கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்" என தெரிவித்தார்.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு பேசுகையில், "கேப்டன் விஜயகாந்த் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. கலைத்துறையில் அவர் கால்பதித்த காலம் முதல் ஏழை எளிய, உழைக்கும் மக்களின் உரிமை குரலாக தன்னுடைய கதாப்பாத்திரத்தை ஏற்று வலிமையாக, வீரியமாக, சமூகத்தின் கடைசி மனிதனுக்காக கலைத்துறையிலே தொண்டாற்றியவர் கேப்டன்.
அரசியல் துறையிலே அவர் கால் பதித்த நாள் முதல் திரைத்துறையிலே சாதிகளை கடந்து மதங்களைக் கடந்து மனித நேயத்துக்கு முக்கியத்துவம் தந்த கலைஞன் விஜயகாந்த். அந்த மகத்தான மாமனிதர் மனிதாபிமானம், இரக்கத்திற்கு வடிவமாக இருந்தவர் விஜயகாந்த். அவர் சினம் கொண்ட போது கூட, அது யாரையும் காயப்படுத்தியதாகவே அல்லது வீழ்த்தியதாகவோ வரலாறு இல்லாத அளவுக்கு ஒரு பண்பட்ட மனிதர்.
திரைத்துறையில் வெற்றிகளை சூடினார். அரசியல் துறையில் வெற்றிகளின் படிக்கட்டைத் தொடுகின்ற சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, நெருக்கடிகளுக்கு இரையாகி இப்படி மரணித்திருப்பது என்பது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பு. குறிப்பாக ஈழத்தமிழர்களின் நலன்களுக்காக தன் வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்தவர்.
ஏழை மக்களுக்கு தான் உழைத்து சேகரித்த பணத்தை எல்லாம் வாரி இறைத்த வள்ளல் குணம் படைத்தவர். அப்படிப்பட்டவரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து தவிக்கும் அவரது கும்பத்தினர், உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழ் சமூகம் அனைவருக்கும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பாக ஆழ்ந்த இரங்கல்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "உழைப்பால் உயர்ந்த தலைவனுக்கு வீரவணக்கம்" - வேல்முருகன் நேரில் அஞ்சலி!