சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யாவுக்கு தமிழ்நாடு அரசு நேற்று (ஜூலை 28) தகைசால் தமிழர் விருது அறிவித்தது.
இதற்கு அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே ரங்கராஜன் ஆகியோர் இன்று (ஜூலை 29) தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
நேரில் சென்று விருது
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன், "முதலமைச்சர் ஸ்டாலின் சங்கரய்யாவின் வயது முதிர்வு காரணமாக தானே வீட்டிற்கு சென்று விருது வழங்க இருப்பதாகவும், அதற்கான தேதியைப் பின்னர் அறிவிப்பதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு பாராட்டிற்குரிய பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறார்.
சங்கரய்யாவுக்கு விருது தொகையாக வழங்கப்படவுள்ள 10 லட்சம் ரூபாயையும் முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு சங்கரய்யா அளிக்கவுள்ளார். இதன் மூலம் சங்கரய்யா கம்யூனிச இயக்கத்தில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பதை உணர முடியும்.
தேர்தல் வாக்குறுதி - அதிமுகவுக்கு உரிமை இல்லை
10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த அதிமுக, ஏராளமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக புதிய அரசு வந்த மூன்று மாதங்களில் நீட் தேர்வை ரத்து வேண்டும் என்பது வேடிக்கையாக இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியை பற்றி பேசும் தார்மீக உரிமை அதிமுகவுக்கு இல்லை.
மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. அங்குள்ள நிலையற்ற அரசியல் சூழல் காரணமாக அவர்கள் தமிழ்நாட்டிற்கு எதிராக மேகதாது அணை குறித்து பேசிவருகிறார்கள்" எனக் கூறினார்.
இதையும் படிங்க : முதுபெரும் தலைவர் என். சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது அறிவிப்பு