சென்னை: அயனாவரம், திருவள்ளுவர் நகர், அண்ணா மெயின் தெருவில் மகேந்தர் (33) என்பவர் வசித்து வருகிறார். ரத்தினராம் என்பவரது மகனான மகேந்தர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு துணிக் கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், துணிக் கடையின் உரிமையாளர் கடந்த ஜூலை 17ஆம் தேதி இரவு மகேந்தரிடம் போரூருக்குச் சென்று 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வசூலித்து வர சொல்லி அனுப்பி உள்ளார்.
இதன்படி, மகேந்தர் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு கீழ்பாக்கம், நியூ ஆவடி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்து உள்ளார். அப்போது பேட்டரி சார்ஜ் இல்லாமல் வண்டி நின்று விட்டதாகவும், அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் தன்னிடம் இருந்த பணத்தையும், செல்போனையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டதாக கே 2 அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். மகேந்தர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: Chennai Crime News: மாஜி பாஜக பிரமுகர் கைது; பிரபல ரவுடி கைதின் பின்னணி!
மேலும், கே 2 அயனாவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தின் அருகில் பொருத்தி இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து உள்ளனர். அப்போது அதில் மகேந்தர் குறிப்பிட்டதுபோல் எந்தவொரு குற்றச் சம்பவமும் நிகழவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
எனவே, இது குறித்து காவல் துறையினர் மகேந்தரிடம் விசாரணை செய்து உள்ளனர். அப்போது, மகேந்தர் மற்றும் அவரது நண்பர் சுக்காராம் ஆகிய இருவரும் சேர்ந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அபகரிக்க திட்டமிட்டு கொள்ளை போனதாக நாடகமாடியது தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து மகேந்தர் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அயனாவரத்தில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அவரது நண்பர் சுக்காராம் (25) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் பணம் மற்றும் ஒரு செல்போனையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையும் படிங்க: வீடு கட்டி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி - இன்ஜீனியர் மீது புகார்