சென்னை: சென்னை விமான நிலையத்தில் வார கடைசி நாட்களான வெள்ளி, சனி ஆகிய நாட்களில் வழக்கமாக பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், இன்று பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. மேலும், திங்கள் கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் என்றாலும், பயணிகள் கூட்டம் அதிகமாக இல்லை. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் இன்று 5 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் என மொத்தம் 10 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்பட்ட விமானங்கள்: காலை 6.10 மணிக்கு விசாகப்பட்டினம் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 7.15 மணிக்கு கொல்கத்தா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ், பகல் 1.10 மணிக்கு மும்பை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ், மாலை 5.45 மணிக்கு கொச்சி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ், இரவு 11.50 மணிக்கு டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஆகிய 5 புறப்பாடு விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களான காலை 7.10 மணி கொல்கத்தா, 10.10 மணி விசாகப்பட்டினம், பகல் 12 மணி மும்பை, இரவு 8.40 மணி கொச்சி, இரவு 9.45 மணி டெல்லி ஆகிய 5 வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் போதிய பயணிகள் இல்லாமல் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"டெங்குவால் பாதிக்கப்பட்ட அனைவரும் நலமே" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!