தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். இவர்கள் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பினை முடித்து இருக்க வேண்டும்.
தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். இந்தப் படிப்பில் சேர்வதற்கு ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை www.tnscert.org ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகின்றன. மேலும் கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்துவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படும் 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஆறு ஒன்றிய ஆசிரியர் கல்வி நிறுவனம், எட்டு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில் ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
இந்தப் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களின் அனைத்து தேர்வுகளும் தற்காலிகமானவை. விண்ணப்பதாரர் அளித்துள்ள தகவல்கள் குறைபாடுடையதாகவோ, தவறானதாகவோ, மறைக்கப் பட்டதாகவோ இருந்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களது தேர்வு சேர்க்கையுடன் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படும்.
பார்வையற்ற, வாய்பேசாதவர்கள் விண்ணப்பிக்க முடியாது:
தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு , தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே கற்பிக்க வேண்டியுள்ளதால் முழுவதும் பார்வையற்றோர், வாய் பேசாதோர், காது கேளாதோர் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
மற்ற தகுதியான மாற்றுத் திறனாளிகள் மாவட்ட மருத்துவக்
குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு சேர்க்கைக்குத் தகுதியானவர் என்ற குறிப்புடன் கூடிய சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். அரசு உதவிப்பெறும், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்கள் அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இந்தாண்டு 62 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணைப்பு அனுமதி, ஆசிரியர்
பணியாளர் பட்டியல் ஒப்புதல் பெறாத நிறுவனங்கள் அல்லது ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியல் ஒப்புதல், சேர்க்கை ஒப்புதல் மற்றும் இணைப்பு அனுமதியை இடையில் இழந்த நிறுவனங்கள் ஆகியவற்றில் மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட மாட்டார்கள். தற்காலிகச் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்கள் தங்களின் கல்வியை அந்நிறுவனத்தில் தொடர இயலாது. அவர்களது சேர்க்கை ரத்து செய்யப்படும் எனக் மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...லாக்கரில் இருந்த 14 கிலோ தங்க நகைகள் திருட்டு: போலீஸ் விசாரணை