தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் மயில் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “கரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தியாவிலும் கரோனாவின் கோரத்தாக்குதல் தொடங்கியிருக்கிறது. 130 கோடி மக்கள் தொகையுடைய நம் நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கூலித் தொழிலாளர்கள், முறைசாராத் தொழிலாளர்கள், வறுமைக்கோட்டுக்கு கீழே வசிப்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விலையில்லாப் பொருட்கள் வழங்கவும், குடும்ப அட்டைக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கவும் முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கதுதான். இருப்பினும், இத்தொகை மிகவும் குறைவானது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படவேண்டும்.
விலையில்லா ரேஷன் பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கப்பட வேண்டும். இந்த பெருந்தொற்றின் நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களும், தங்களது ஒருநாள் ஊதியத்தை தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்திட மாநில அமைப்பு முடிவு செய்துள்ளது.
ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து இத்தொகையைப் பிடித்தம் செய்திட தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும். நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட ஆர்வமுள்ள ஆசிரியர்களை அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாநில அரசு முன்வந்தால் எங்களது அமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஈடுபட தயாராக உள்ளார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: 'தளபதியின் அன்பான விசாரிப்பு தெம்பு தந்தது': எம்.பி.ரவிக்குமார் உருக்கம்!