சென்னை: தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், கல்வி கற்பிப்பதன் முக்கியத்துவத்தை மனதிற்கொண்டு தமிழக அரசு உடனடியாக பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தி தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்தில் உள்ள தகவலின்படி தமிழ்நாட்டில் உள்ள 37 ஆயிரத்து 554 பள்ளிகளில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 400 பேர் ஆசிரியர்களாக உள்ளனர். இவர்களில் பணியில் மூத்தவர்கள் தலைமை ஆசிரியர்களாக தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியில் அமர்த்தப்படுகின்றனர். ஆண்டுதோறும் பணி முடிந்து ஒய்வு பெறும் தலைமை ஆசிரியர்களுக்கு பதிலாக பதவி உயர்வு மூலம் தலைமையாசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
நடப்பாண்டிற்கு நடைபெற்ற கலந்தாய்வின்போது உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இருந்த காலியிடங்களுக்கு தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் அளிக்கப்பட்டது. அதன் பின்னர், 1,105 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, 670 மேல்நிலை பள்ளிகளிலும், 435 உயர்நிலை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், பள்ளிகளின் நிர்வாக பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் காரணமாக அந்தப் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை என தெரிகிறது.
இதையும் படிங்க: பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும்: ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, வரும் 7ஆம் தேதி பள்ளிகள் திறந்த உடன் புத்தகம், நோட்டுகள், சீருடைகள் வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், தலைமையாசிரியர்கள் இல்லாததால் பள்ளிகளை திறந்து, வரும் கல்வி ஆண்டுக்கான பணிகளை மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் பணிகளை கவனிக்க, மூத்த முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பொறுப்பு தலைமை ஆசிரியர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் தனது வழக்கமான பாடம் கற்பிக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடும்.
இது குறித்து இன்று (ஜூன் 1) தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் அவர் வெளியிட்ட வீடியோவில், "தமிழக பள்ளிக்கல்வித்துறையில் இதுவரை இல்லாத வகையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தொடக்கக் கல்வித்துறையில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
மேல்நிலை வகுப்புகளில் உள்ள முதுகலை ஆசிரியர்களை பாடம் கற்பிக்கும் பணிக்காக கீழ்நிலை வகுப்புகளில் போடுகின்றனர். பணி நிரவல் கலந்தாய்வு முழுமையாக நடத்தப்படவில்லை. பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத உள்ள பிரச்னைகளுக்காக ஆசிரியர்கள் நீதிமன்றங்களை நாடி தடை உத்தரவுகளை பெறுகிறார்கள். இதனால் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அவ்வப்போது ஆசிரியர்கள் சங்கங்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டால் இதுபோன்ற நிலை ஏற்படாது.
நிர்வாகப் பணிகளை கவனிக்கும் தலைமையாசிரியர்கள் இல்லாததால் பள்ளிகளில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும். மாணவர்கள் கண்காணிப்பு பணிகளில் பாதிப்பு ஏற்படும். மாணவர்களுக்கான விலையில்லாப் பொருட்களை வழங்குவதில் சிக்கல் ஏற்படும். தமிழக அரசு உடனடியாக பதவி உயர்வுப் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். விரைவில் கலந்தாய்வு நடத்தி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பணி நிரவல் கலந்தாய்வில் உள்ள குளறுபடிகளை சரி செய்த பின்பு நடத்தக் கோரிக்கை!