சென்னை பல்லாவரம் பகுதியில் 30 வயதுடைய பெண் ஒருவர் வசிக்கிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார். இவரது வீட்டில் அருகே பிரபல தமிழ் தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் 'இதயத்தை திருடாதே' சீரியல் படப்பிடிப்பு நடந்தது.
அப்போது அத்தொடரின் மேலாளர் ரகு(53) என்பவருக்கும் இந்தப் பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தனது மனைவி இறந்துவிட்டதாக கூறியும், சீரியலில் நடிக்க வைப்பதாக கூறியும் அப்பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.
இதன் காரணமாக கர்ப்பமடைந்த அவர் நான்குமுறை கருகலைப்பு செய்துள்ளார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ரகுவிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால், ரகுவோ தனது தொடர்பை துண்டித்துள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்த அப்பெண், ரகு மீது புகார் அளிக்க காவல் துறையினரிடம் சென்றார். ஆனால், அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் நடத்தை சரியில்லாதவர்போல் சித்தரித்தும் ரகு மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யமால் இழுத்தடித்தனர்.
இந்நிலையில், தனது புகாரை காவல் துறையினர் ஏற்கவேண்டும் என நீதிமன்றத்தில் அப்பெண் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் 417, 376, 492, 323, 506(1), ஆகிய 5 பிரிவின் கீழ் ரகு மீது வழக்குப்பதிவு செய்தனர்.
முதல் தகவல் அறிக்கையில், ரகு அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து ஏமாற்றியதாகவும் அவரை தாக்கி இரண்டு பவுன் தங்க சங்கிலியை பறித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரகு, அவரது உறவினரான வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக ரகு, பிரபாகரனை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: நீதித்துறை நடுவர் மீது பெண் வழக்குரைஞர் பாலியல் புகார்!