சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்ற ஆசிரியர்கள் மூன்றாவது நாளாக இன்றும் (ஜூன் 30) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில், “ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்.
ஆசிரியர் பணி நியமனத்திற்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு என்கிற அரசாணை எண் 149 ஐ ரத்து செய்ய வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதி 177 இல் கூறியது படி, நிறைவேற்ற வேண்டும்” என்பதை வலியுறுத்துகின்றனர். பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் ஆண்கள், பெண்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், “போராட்டத்தின்போது ஆசிரியர் தமிழ் தேர்வு தேர்ச்சி பெற்ற தங்களை தற்போது காலியாக உள்ள பணியிடங்களில் நியமனம் செய்ய வேண்டும். தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யக்கூடாது. முதலமைச்சர் கூறிய வாக்குறுதி நிறைவேற்றப்பட்டாலும், நாங்கள் பணி நியமனத்துடன் தான் வருவோம், இல்லாவிட்டால் வரமாட்டோம் எனக் கூறிவிட்டு வந்துள்ளோம். அதனை நிறைவேற்றுவோம்” எனவும் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து மொட்டை அடித்தும், பிச்சை எடுத்தும், ஒப்பாரி வைத்தும் திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தின்போது, “திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் எழுந்து வா! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இதயமற்றவர் என கூறினார். ஆனால் முதலமைச்சருக்கு இதயம் இருக்கிறதா?” என்ற கேள்வியையும் எழுப்பினர்.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை தரப்பில், “ஆசிரியர்கள் தகுதித்தேர்வு முடித்தவர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கு தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தில் எவ்வாறு முன்னுரிமை வழங்கப்படும் என்ற வழிமுறைகள் வெளியிடப்படும் வரை தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கு புதிய ஆசிரியர்களை தேர்வு செய்யக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சங்க தலைவர் ஷீலா தொடர்ந்த வழக்கு தொடர்பாக “முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தான ஒன்று. மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களுக்கு தேவையான தகுதியற்றவர்களை பணியில் அமர்த்த நேரிடும்” என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’ஆபாச படத்தை வெளியிடுவேன்' என கானா பாடல்: காதலியை மிரட்டிய பாடகர் கைது