சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தின் அடைவுத்திறனை சோதனை செய்வதற்கு பி.எட் படிக்கும் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடம் ஆசிரியர்கள் பலரும் இன்று (ஆக.29) கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் கரோனாவால் ஏற்பட்ட கற்றல் பின்னடைவை சரி செய்வதற்காக “எண்ணும் எழுத்தும் திட்டம்” தொடங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை மதிப்பீடு செய்வதற்கு கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் பயின்று வரும் மாணவர்களைக் கொண்டு, அடைவுத்திறன் தேர்வுகள் மாணவர்களுக்கு நடத்தப்படும் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்தது. இதற்கு ஆசிரியர்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.
மேலும், பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் கற்பித்தல் பணியை கல்வியியல் கல்லூரி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்வதா? என கேள்வியும் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் க.அறிவொளி, தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் இணைந்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளை நேரில் அழைத்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் கூறும்போது, '20 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களை பி.எட் கல்லூரிகளில் மாணவர்களாக இருப்பவர்களைக் கொண்டு ஆசிரியர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்யும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையை ஏற்க முடியாது எனவும், எண்ணும் எழுத்தும் அடைவுத்திறனை சோதனை செய்யவதை எதிர்க்கவில்லை எனவும் கூறினார். ஆசிரியர்களின் கற்பித்தலை மாணவர்கள் ஆய்வு செய்வார்கள் எனக் கூறியதால் அரசின் மீது கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
பள்ளிக்கல்வித்துறையின் ஆணையர் இருந்தபோது, பல முறைகளில் இருந்து சுற்றறிக்கை வந்ததுபோல் இல்லாமல், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் துறைகள் சார்ந்த சுற்றறிக்கைகள் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடமிருந்து மட்டுமே வந்தால் இத்தகைய குழப்பங்களை தவிர்க்க முடியும்' என அவர் தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனருடன் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (TETO JAC) உயர்மட்டக்குழு உறுப்பினரும், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாருமான கோ.காமராஜ் கூறும்போது, 'ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணி சுமைகளை ஏற்படுத்துவதோடு, மாணவர்களின் கல்வித்தரத்தினை முற்றிலும் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும், எண்ணும் எழுத்தும் திட்டத்தை பி.எட் படிக்கும் மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாது எனவும் வலியுறுத்தினோம் என்றார்.
அது குறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனரிடம் பேசி, இது போன்று செய்யக்கூடாது எனவும், காலாண்டு விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதையும் மாற்றி அமைக்க வேண்டும் எனக் கேட்டுள்ளோம் என்றார்.
மேலும், பள்ளி மேலாண்மைக்குழுவின் கூட்டத்தை மாதம் ஒரு முறை நடத்துவதை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இருப்பதாகக் கூறினார். எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மூன்றாம் நபர் மதிப்பீடு இருக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்தி உள்ளோம்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஈடிவி செய்தி எதிரொலி.. குன்னூரில் தரமற்ற சாலையை சீரமைக்க உத்தரவிட்ட அதிகாரிகள்.. பொதுமக்கள் மகிழ்ச்சி!