சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ”டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் வாங்குபவர்களுக்கு உரிய ரசீது அளிக்கப்படுவதில்லை. அதனால், மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. விற்பனை தடை செய்யப்பட்ட நாள்களிலும் பதுக்கல்கள் காரணமாக மதுபானங்கள் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனையும் நடைபெறுகிறது. பள்ளி மாணவ, மாணவியர்கள் கூட மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதைக் காண முடிகிறது. இதனை தவிர்க்க கள்ளச்சாராயம், சட்ட விரோத மது விற்பனை குறித்து புகார் அளிக்க தனி தொலைபேசி எண் அறிவிக்க வேண்டும். மது விற்பனை செய்ய மொபைல் ஆப் மற்றும் இணையதள வசதி ஆரம்பிக்க வேண்டும். மதுபான கடைகளில் ரொக்க விற்பனையை தடை செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினித்கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”மனுதாரர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதை மறைத்துள்ளார். மேலும் டாஸ்மாக் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து உத்தரவிட மனுதாரர் கேட்க முடியாது என்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார்.
இதையடுத்து, மனுவை திரும்பப்பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்காத நீதிபதிகள், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர். அபராதத் தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இன்னும் ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கோயம்பேடு சந்தையைத் திறப்பது குறித்து பதிலளிக்க மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!