TASMAC Bar Tender: தமிழ்நாடு முழுவதும்,டாஸ்மாக் சில்லறை மதுபான விற்பனை கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில், தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த டெண்டரை எதிர்த்து பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே பார் வைத்திருந்தவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை என்றும், நில உரிமையாளர்களின் தடையில்லாச் சான்றிதழ் ஏற்கனவே பெற்றுள்ளதால் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.
விண்ணப்பம்
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அனைவருக்கும் டெண்டர் விண்ணப்பங்களை வழங்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி இதுவரை 2,530 பார்களுக்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், 8 மாவட்டங்களில் மட்டுமே பல்வேறு காரணங்களுக்காக டெண்டர் தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
உரிமத்தை நீட்டிக்க வேண்டும்
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், கரோனா ஊரடங்கு காலத்தில் 15 மாதங்கள் பார்கள் நடத்தப்படாததால், உரிமத்தை நீட்டிக்க வேண்டும் என கோரினார். ஏற்கனவே பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 14 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய நிபந்தனைகள்
இதையடுத்து, முந்தைய கால டெண்டர் படிவத்தையும், தற்போது வெளியிடப்பட்டுள்ள டெண்டர் படிவம் மற்றும் புதிய நிபந்தனைகள் குறித்த அறிவிக்கையையும் தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 7 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஒரு மெகாவாட்டுக்கு ரூ.20 லட்சம்... தமிழ்நாட்டில் கல்லா கட்டும் வேலை!'