டெல்லி நிஜாமுதீன் மாநாட்டிற்குச் சென்று திரும்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கண்டறியப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். அதன்படி பல்லாவரம், தாம்பரம் பகுதிகளில் சுமார் 1,400 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 35 பேர் டெல்லி இஸ்லாமிய மத மாநாடு, வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டு, அவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று இருந்ததால் அவர் சிகிச்சைக்காகச் சென்ற மருத்துவமனை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதில் பழைய பல்லாவரம் துரைக்கண்ணு சாலையில் உள்ள மசூதியில் கடந்த 23ஆம் தேதி டெல்லி இஸ்லாமிய மத மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் வந்ததாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் பல்லாவரம் வட்டாட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அவர்களை மீட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
தாம்பரத்திலிருந்து டெல்லி இஸ்லாமிய மத மாநாட்டில் கலந்து கொண்ட 15 பேர் மீட்கப்பட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 3 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள இந்த மூவரும் செம்பாக்கம் நகராட்சிக்குட்பட்ட மசூதி காலனியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்ததால், அப்பகுதியை தனிமைப்படுத்தி காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி மக்களை அவரவர் வீட்டிலியே இருந்து தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: 'துப்புரவு பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார்கள்'- அமைச்சர் கே.பி. அன்பழகன்