சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (இஸ்ரோ) இணைந்து ‘திரவ- வெப்ப அறிவியல்’ ஆராய்ச்சிக்கான உயர் சிறப்பு மையத்தைத் தொடங்கவிருக்கிறது. இந்த மையத்தை அமைப்பதற்கான தொடக்க நிதியாக ரூ.1.84 கோடியை இஸ்ரோ நிறுவனம் வழங்க உள்ளது.
இஸ்ரோவின் விண்கலம் மற்றும் ஏவுவாகனம் தொடர்பான வெப்ப மேலாண்மை ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு மையமாக இந்த மையம் செயல்பட உள்ளது. ஐஐடி மெட்ராஸ் ஆசிரியர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம், பல்வேறு கூறுகளின் வடிவமைப்பு, பகுப்பாய்வு, சோதனை தொடர்பாக ஏற்படும் வெப்பச் சிக்கல்களுக்கு தீர்வுகாண முடியும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்: இந்த ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐஐடி மெட்ராஸ் (தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி) டீன் பேராசிரியர் மனு சந்தானம், இஸ்ரோவின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநரகத்தின் இயக்குநர் டி.விக்டர் ஜோசப் ஆகியோர் நவம்பர் 11, 2024 இன்று கையெழுத்திட்டனர்.
In a landmark move, @iitmadras and @isro have signed an #MoU to establish a ‘Centre of Excellence in Fluid and Thermal Sciences’ with ₹1.84 crore funding. This centre will address key #thermalmanagement challenges for #spacecraft and #launchvehicles, propelling India's… pic.twitter.com/PSyXvEHQlN
— IIT Madras (@iitmadras) November 11, 2024
ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறையின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அரவிந்த் பட்டமட்டா, ஐஐடி மெட்ராஸ், இஸ்ரோ ஆகியவற்றில் இத்துறை சம்பந்தப்பட்டவர்கள் பலரும் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ஐடி ஊழியர் டூ விவசாயி.. தஞ்சையை கலக்கும் விக்னேஸ்வரன்!
முக்கிய அம்சங்கள்: இந்த ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்கள் விண்கலம் மற்றும் ஏவுவாகனத்திற்கான வெப்ப மேலாண்மையில் உள்ள சவால்கள் குறித்து ஆய்வு செய்வதுடன், இஸ்ரோவுக்கான முக்கிய ஆராய்ச்சித் தளமாக இந்த மையம் செயல்பட உள்ளது.
மேம்பட்ட ஆராய்ச்சித் திட்டங்கள்: விண்கலத்தின் வெப்ப மேலாண்மை, ஹைபிரிட் ராக்கெட்டுகளில் உறுதியற்ற எரிப்புத்தன்மை, கிரையோ டேங்க் வெப்ப இயக்கவியல் உள்ளிட்டவை இந்த ஆராய்ச்சித் திட்டத்தின் முக்கிய பகுதிகளாகும்.
தொழில்துறை-கல்வித்துறை ஒத்துழைப்பு: ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறையின் பேராசிரியர் அரவிந்த் பட்டமட்டா இது குறித்து கூறுகையில், “இந்த மையம் தனித்துவமான தொழில் - கல்வி பயன்பாட்டை மேம்படுத்தும். இஸ்ரோ விஞ்ஞானிகள், ஐஐடி மெட்ராஸ் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து முக்கிய பகுதிகளில் ஆராய்ச்சியை முன்னெடுக்க இந்த முயற்சி வகைசெய்கிறது.
வெப்ப அறிவியலின் சிக்கலான சவால்களை எதிர்கொள்வதன் மூலம் நாட்டின் விண்வெளித் திட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கவும், விண்வெளித் தொழில்நுட்பங்களில் இந்தியாவின் தன்னம்பிக்கையை வலுப்படுத்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என்றார்.
மேம்பட்ட கல்வி ஆராய்ச்சி மூலம் அடிப்படை அறிவை உருவாக்க வேண்டும் என்ற நோக்குடன் இஸ்ரோ, ஐஐடி மெட்ராஸ் ஆகியவை இணைந்து 1985-ம் ஆண்டில் ‘இஸ்ரோ-ஐஐடிஎம் ஸ்பேஸ் டெக்னாலஜி செல்’ என்ற பிரிவைத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.