சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் உள்ள மண்டபத்தில் இன்று வரவு-செலவுத் திட்ட அறிக்கை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. முதன்முறையாக அமைச்சராகியுள்ள (நிதி மற்றும் மனிதவள மேலாண்மை) பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் பட்ஜெட்டை (காகிதமில்லா வரவு-செலவுத் திட்ட அறிக்கை) காலை 10 மணியளவில் தாக்கல்செய்கிறார்.
அதற்காக ஒவ்வொரு உறுப்பினரின் மேசைக்கு முன்பாக கணினி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கையடக்க கணினியும் அளிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் வரவு-செலவுத் திட்ட அறிக்கையை வாசிக்கத் தொடங்கும்போது அதிலுள்ள வரிகள் கணினி திரையில் தெரியும். அதேபோல், வரவு-செலவுத் திட்ட அறிக்கையைப் புத்தக வடிவில் கையடக்க கணினியில் பார்க்க முடியும்.
வேளாண்மைக்கும் இதுதான் முதல்முறை
தமிழ்நாட்டின் கடன் சுமை ரூ.5.50 லட்சம் கோடியைத் தாண்டியுள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் அது ஐந்து லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயைக் கடக்கும் எனத் தெரிகிறது. இந்தச் சிக்கலான தருணத்தில், புதிய அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
அதேபோல், வேளாண்மைக்கென்று தனி வரவு-செலவுத் திட்ட அறிக்கை நாளை (ஆகஸ்ட் 14) தாக்கல்செய்யப்படவுள்ளது. இதுவும் தமிழ்நாடு வரவு-செலவுத் திட்ட அறிக்கை வரலாற்றில் முதன்முறையானது. இந்தக் கூட்டத்தொடரில் திமுகவின் வாக்குறுதிகள், அண்மையில் நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை ஆகிய விவகாரங்கள் குறித்து அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பும் எனக் கூறப்படுகிறது.
மு.க. ஸ்டாலினின் ஆட்சியில் இது முதல் வரவு-செலவுத் திட்ட அறிக்கை, ஆக இந்த பட்ஜெட்டில் பல்வேறு புதுமையான விஷயங்கள் நடக்கின்றன. அதேபோல், வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் புதிய அம்சங்கள் இடம்பெறுமா என வர்த்தகர்கள், வியாபாரிகள், பொருளாதார வல்லுநர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு வரவு-செலவுத் திட்ட அறிக்கை: தொழில் துறை எதிர்பார்ப்புகள் என்ன?