சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழையும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரியும், குறைந்தபட்சம் 29 டிகிரி செல்ஷியஸ் இருக்கும்.
இன்றும், நாளையும் கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, கோவா, மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். அதேபோல், ஜூன் 17ஆம் தேதி வடக்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். இதனால், அப்பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டிவதைத்த நிலையில், தற்போது சென்னையை அடுத்த தாம்பரம், முடிச்சூர், மண்ணிவாக்கம், மணிமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்துவருகிறது. கடந்த சில நாள்களாக வறண்ட வானிலையுடன் காணப்பட்ட சென்னையில், வெப்ப சலனம் காரணமாக பெய்த இந்த மழை, சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க:ஈரோட்டில் இடியுடன் கூடிய கனமழை!