சென்னை: 2023-24ஆம் கல்வியாண்டிற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் 4 கோடியே 12 லட்சத்து 48 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 3 கோடியே 18 ஆயிரத்து 66 புத்தகங்களும், தனியார் பள்ளிகளுக்கும், விற்பனைக்கும் 1 கோடியே 20 லட்சத்து 93 ஆயிரம் புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிடங்குகளுக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தவுடன் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்படும்.
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் விற்பனையை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தொடங்கியுள்ளது. சென்னையை பொருத்தவரை டிபிஐ பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம், அடையாறில் உள்ள தமிழ்நாடு பாடநூல் விற்பனை கிடங்கு ஆகியவற்றில் விற்பனை தொடங்கியுள்ளது.
2023-24ஆம் கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் 8, 9, 11ஆம் வகுப்பு பாட நூல்கள் கடந்த 13ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 முதல் 7ஆம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தமிழ் பாட நூல்கள் கடந்த 13ஆம் தேதி முதல் விற்பனை நடைபெற்று வருகிறது.
தனியார் பள்ளிகளில் தமிழ்நாடு மாநிலப் பாடத்தில் படிக்கும் 1 முதல் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் விற்பனை விரைவில் தொடங்கப்படும் என்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தனியார் பள்ளிகள் பாடப் புத்தகங்களை textbookcorp.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உபகரணங்கள் ஜூன் மாதம் பள்ளிகள் திறந்த உடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.