சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொடக்கப் பள்ளிகளில் தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் நீட்டித்திருப்பதை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு முழு மனதுடன் வரவேற்கிறது.
மதுரையில் கருணாநிதி நூலகம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூல் நிலையத்திற்கான புத்தகங்களின் எண்ணிக்கை நிதி அதிகரிப்பு போன்ற அறிவு சார்ந்த நிலையை நோக்கி தமிழ்நாட்டை உயர்த்திச் செல்லும் இந்த நடவடிக்கைகளை மாநில மையம் பாராட்டி மகிழ்கிறது.
அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்குமான மாதாந்திர உதவித்தொகை நீட்டிப்பு என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து மக்களையும் வாழ்வியல் தரத்தை உயர்த்த வேண்டும் என்கிற தமிழ்நாடு முதலமைச்சரின் உன்னத உணர்வினைப் பாராட்டுகிறோம். அரசுத் துறைகளின் கீழ் இயங்கி வரும் அனைத்து வகையான பள்ளிகளும் இனி பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு பட்டதாரி கூட்டமைப்பு வாழ்த்தி வரவேற்கிறோம்.
அதனால் நிர்வாக கட்டமைப்பு, நிதி ஒதுக்கீடு, ஆசிரியர் நியமனம் ஆசிரியர்களின் இடமாறுதல், பதவி உயர்வு போன்றவை எல்லாம் அனைவருக்கும் பொதுவானதாகவும் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிப்பதாகவும் இருக்கும். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பள்ளிக்கல்வித் துறை ஆணையரிடம் பலமுறை இதை வலியுறுத்தி வந்துள்ளது, அமைப்பின் நீண்ட நாள் கோரிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.
தமிழ்நாடு முதலமைச்சருக்கும், அவரது வழிகாட்டுதலில் செயல்பட்டு வரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அனைவருக்கும் எமது அமைப்பின் சார்பில் நன்றிகளை தெரிவித்து, இந்த அறிவிப்பை வரவேற்கும் அதே வேளையில், இந்த இணைப்பில் மாநகராட்சிப் பள்ளிகளையும் கொண்டுவர வேண்டும் என்ற வேண்டுகோளினையும் முன்வைக்கிறோம்.
நிதிநிலை அறிக்கை பாராட்டுகிற அதே வேளையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியான ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரமான தன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், ஊதிய முரண்களைக் களைத்தல், சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஊக்க ஊதியம், அகவிலைப்படி நிலுவைத்தொகை, ஊதியக்குழுவின் 21 மாதகால நிலுவைத்தொகை, நீண்டகாலமாக தொடக்கத் கல்வித் துறையில் எவ்வித பதவி உயர்வும் இல்லாமல் இருக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு குறித்த எந்த அறிவிப்போ அறிகுறியோ இல்லாமல் இருக்கும் நிதிநிலை அறிக்கை அனைவருக்கும் ஏமாற்றமானதாகவே இருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இந்த கூட்டத் தொடரிலேயே வாழ்வாதார கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ மாநாட்டில் அறிவித்த, படிப்படியாக நிறைவேற்றப்படும் என்கிற வாக்குறுதியினை நிறைவேற்றித் தர வேண்டும்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: செப்.15 முதல் மகளிர் உரிமைத் தொகை: பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு!