தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் இணையவழிக்கூட்டம் இன்று(ஜூலை 12) நடைபெற்றது. இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு ஆசிரியர் சங்க கோரிக்கையினை ஏற்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நேரிடையாக சத்துணவுப்பொருள்களை வழங்கும் அரசின் முடிவை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பாராட்டுகிறது.
தமிழ்நாடு அரசு கல்வித் தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி வழியே பாடங்களை ஒளிபரப்பும் செயல்முறையை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது. ஆசிரியர்- மாணவர் நேரடி கற்றல், கற்பித்தல் மூலம் தான் முறையான கல்வியும், மாணவர்களின் ஒழுக்கத்தையும் மேம்படுத்த முடியும்.
அரசுப் பள்ளி மேம்பாட்டு நிதி என்ற திட்டத்தை தொடங்கி, அதில் பெருநிறுவனங்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்களிடம் நிதி பெற்று, அவற்றை அரசுப் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும்.
பேரிடர் காலத்தில் கல்விப்பணி பாதிக்காமல் இருக்க, மாணவர்களுக்குப் போக்குவரத்து வசதி செய்துதர ஏற்பாடு செய்ய வேண்டும்.
பெருந்தொற்று காரணத்தினால், இந்த ஆண்டு மட்டும் 40 விழுக்காடு பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும். 11ஆம் வகுப்பைத் தவிர, மற்ற வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, அரசின் பார்வைக்கு வைத்துள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இரவு 8 மணியுடன் சென்னையில் மேம்பாலங்கள் மூடப்படும்' - போக்குவரத்து காவல் துறை!