சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவது தொடர்பான சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
இதனையடுத்து, இன்று காலை (பிப்ரவரி 5) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டில் நீட் தேர்விலிருந்து விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவினை மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற, ஆளுநர் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துச் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.
இதனையடுத்து, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது, துணை சபாநாயகர் பிச்சாண்டி, பேரவை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளரிடம் பேசிய அப்பாவு, "நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றுவதற்கு, சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டம் வருகின்ற 8ஆம் தேதி 10 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூட உள்ளது.
சட்டமன்றப் பேரவைக்கு வருகின்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் நீட் விவகாரம்: கட்சித் தலைவர்களின் காரசார கருத்துகள்