கரோனா தொற்று பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, சென்னை பெருநகர காவல் எல்லைக்குள்பட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் இம்மாதம் 30ஆம் தேதிவரை வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33 விழுக்காடு பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்பட தமிழ்நாடு அரசு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் 150 ஊழியர்களுக்கு மேல் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு தலைமை செயலக சங்கத்தில் 33 விழுக்காடு பணியாளர்களை மட்டும் அனுமதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தலைமை செயலகத்தில் 33 விழுக்காடு பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.