தமிழ்நாடு அரசு அண்மையில் சலூன், அழகு நிலையம் இயங்க நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. இது தொடர்பாக வருவாய் மற்றும் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் - அழகு நிலையம், ஸ்பா உரிமையாளர்கள், பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய அறிவுரைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர், ஆணையர், பெருநகர மாநகராட்சிக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகள்:
அழகு நிலையத்தின் நுழைவு வாயிலில் சானிடைசர் அல்லது சோப்பு, தண்ணீர் கொண்டு கை கழுவுவதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண், ஆதார் விவரங்களைப் பதிவேட்டில் குறித்துக் கொள்ள வேண்டும்.
பணியாளர்கள் தங்களது கைகளைத் துடைப்பதற்காக வைக்கப்பட்டுள்ள திசுத்தாளைப் (Tissue paper) பாதுகாப்பாக அப்புறத்துதல் வேண்டும். சேவையைத் தொடங்குவதற்கு முன்பு பணியாளர்கள் தங்களது கைகளை சானிடைசர் அல்லது சோப்பு கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். இத்தகைய சுய தூய்மை நடைமுறைகளை அழகூட்டும் பணியினை தொடங்கும் முன்பு ஒவ்வொரு வாடிக்கையாளரும் பின்பற்ற வேண்டும்.
அழகு நிலையம், ஸ்பாக்களின் உரிமையாளரும், பணியாளர்களும் கட்டாயம் முகக்கவசம், கையுறை அணிய வேண்டும். அவர்கள் அடிக்கடி தங்களது மூக்கு, வாய், கண்களைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அழகு நிலையம், ஸ்பாக்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருமல், சளி அல்லது காய்ச்சல் இருப்பின், அரசு மருத்துவரை அணுகி, பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் எக்காரணத்தைக்கொண்டும் பணியில் ஈடுபடக் கூடாது. இதனை ஒவ்வொரு அழகு நிலையம், ஸ்பாக்களின் உரிமையாளர்கள் கட்டாயமாக உறுதிப்படுத்த வேண்டும்.
தகுந்த இடைவெளியைப் பின்பற்றும் வகையில், அழகு நிலையம், ஸ்பாக்களில் ஒரே நேரத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும்.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை இடைவெளி விட்டு அமரவைக்க வேண்டும். வரிசையில் காத்திருக்க போடப்பட்டுள்ள குறியீடுகளில் குறைந்தபட்ச நபர்கள் மட்டுமே காத்திருக்க அனுமதிக்க வேண்டும்.
அழகு நிலையம், ஸ்பாக்கள் காற்றோட்டமாக இருப்பதுடன், காற்றோட்டத்தை உறுதிசெய்யும் வகையில் அனைத்து ஜன்னல்களும் திறந்திருக்க வேண்டும். குறிப்பாக குளிர்சாதன இயந்திரங்கள் அல்லது காற்று குளிரூட்டும் இயந்திரங்கள் ஏற்கெனவே இருப்பின் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
அழகு நிலையம், ஸ்பாக்களின் தரைப்பகுதியை ஒவ்வொரு வாடிக்கையாளருக்கு அழகூட்டும் சேவை உள்ளிட்ட இதர சேவைகள் முடித்த பின்னர் உடனடியாகச் சுத்தம்செய்ய வேண்டும்.
வாடிக்கையாளர்கள் கைகளைச் சுத்தமாகவும் வைத்துக்கொள்ளவும், கண்டிப்பாக முகமூடி அணிந்து கொண்டு கடைகளுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றுகிறார்களா என அந்தந்த மாவட்ட ஆட்சியர், சென்னை பெருநகராட்சி ஆணையர் உறுதிசெய்ய வேண்டும்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையை உலுக்கிய 13 வயது சிறுமி கொலை: பேராசை பிடித்த தந்தை