சென்னை: டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி மே 28ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் இன்று (மே24) அறிவித்துள்ளார். 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற போது வழங்கப்பட்ட செங்கோலும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த செங்கோல் 1947ம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து எப்படி டெல்லியை சென்றடைந்தது என்பதை , அதனை அனுப்பி வைத்த திருவாவடுதுறை ஆதீனத்தின் வாரிசுகள் ஏற்கெனவே தெரியப்படுத்தினர்.
சுதந்திர தினமான கடந்த 15.08.2022 அன்று திருவாவடுதுறை ஆதீனத்தின் 24ஆவது குருவான அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது இது குறித்த விவரங்களை கூறினார். அவர் கூறியதன் படி, ‘1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவதற்கான சட்ட ரீதியிலான வேலைகள் நடந்து கொண்டிருந்தன.
அப்போது, ஆங்கில வைசிராய் மவுண்ட் பேட்டன், நேருவை அழைத்து, ''இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுக்கப் போகிறோம். அதை எப்படிப் பெற்றுக்கொள்ளப்போகிறீர்கள்?'' என்று கேட்டார். நேரு சுதந்திரத்தை அறிவித்து இந்தியர் அரியணை ஏறும் அதிகாரப்பூர்வ விழாவிற்கு ஏற்பாடு செய்வதில் முனைந்தார். அவரோ சடங்குகள், மதங்களில் பழக்கம் இல்லாதவர். எனவே, ராஜாஜியிடம் கூறினார்.
உடனே ராஜாஜி, “கவலை வேண்டாம், தமிழ்நாட்டில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, மதகுருவாக இருப்பவர், செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து, ஆட்சி மாற்றம் செய்வார். அதைப்போல நாமும் ஒரு செங்கோலைத் தயாரிப்போம். அதை வெள்ளைக்காரர்களிடமிருந்து நமது குருமார்களில் ஒருவர் மூலம், பெற்றுக் கொள்வோம் என்றார். நேருவும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்.
ராஜகோபாலாச்சாரியார் உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் திருக்கரங்களால் செங்கோல் கொடுத்து ஆசி வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆனால் அன்றைய ஆதீனம் 20ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் அப்போது காய்ச்சலால் அவதியுற்றுக்கொண்டிருந்தார். அன்றைக்குப் பிரபலமாயிருந்த சென்னை உம்மிடி பங்காரு செட்டியார் நகைக்கடையில் சைவச்சின்னம் பொறித்த தங்கச் செங்கோல் ஒன்று செய்யும்படி ஆதீனத்திலிருந்து சொல்லப்பட்டது.
அப்போதைய சைவ மதகுருவான அம்பலவாண சுவாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் , ஓதுவார்கள் மற்றும் ஆதீன பிரதிநிதிகள் மூலம் டெல்லிக்கு செங்கோல் அனுப்பி வைக்கப்பட்டது. ஆதீன குருவின் அறிவுரையின் பேரில், கோளறு பதிகம் பாட முடிவெடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 15ஆம் நாள் நள்ளிரவில், மவுண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை, திருவாவடுதுறை ஆதீனக்கட்டளை தம்பிரான் சுவாமிகள் பெற்றார்.
செங்கோலுக்கு புனிதநீர் தெளித்து, ஓதுவார், 'வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்' என்று தொடங்குகிற தேவார திருப்பதிகத்தை முழுவதுமாகப் பாடி முடிக்கும்போது செங்கோலை நேருவிடம் வழங்கினார்கள். அரசு சின்னமாக இருக்க வேண்டிய செங்கோல் பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரில் உள்ள நேருவின் இல்லமான ஆனந்தபவனில், இருப்பதை ஆதீன குரு சுட்டிக்காட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று டெல்லியில் பேசிய அமித்ஷா இந்த செங்கோலை அருங்காட்சியகத்தில் வைத்திருப்பது முறையல்ல என கூறினார். நாடாளுமன்றத்தை விட செங்கோலை வைப்பதற்கு தகுதியான இடம் வேறேதும் இருக்காது என குறீப்பிட்ட அவர், திருவாவடுதுறை ஆதீனத்திடமிருந்தே பிரதமர் இந்த செங்கோலை பெற்றுக்கொள்வார் என குறிப்பிட்டார்.