சென்னை: வடக்கு கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இதையடுத்து ஜூலை 20 முதல் 22 வரை கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வருகிற ஜூலை 21 ஆம் தேதி அன்று, வடமேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை நிலவரம்
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வங்கக்கடல்
ஜூலை 19 முதல் ஜூலை 22 வரை, தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
ஜூலை 20 முதல் ஜூலை 22 வரை, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
அரபிக்கடல்
ஜூலை 19 முதல் ஜூலை 22 வரை, வடக்கு அரபிக்கடல், தென் மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
இதனால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: இன்று மழைக்கால கூட்டத்தொடர்- 31 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்!