தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், ஓட்டுனர்கள் என சுமார் 5 லட்சம் பேர் தங்கள் குடும்பத்துடன் தங்கள் வீட்டின் முன்பாக அமர்ந்து அவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி எதிர்வரும் பத்தாம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை ஒரு நாள் பட்டினிப் போராட்டத்தை நடத்துவது என்று முடிவெடுத்து இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் சுமார் 20 ஆயிரம் தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், ஓட்டுநர்கள் பள்ளி நிர்வாகிகள் சுமார் ஐந்து லட்சம் பேர் குறைந்தபட்ச சம்பளம் இல்லாமல் வாழ வழியின்றி வேறு வேலை இன்றி பட்டினியால் வாடும் கொடுமையை போக்க தமிழ்நாடு அரசு வழிவகை செய்ய வேண்டும்.
மேலும் தமிழ்நாடு அரசு பள்ளிகள் திறக்கும் வரை மாதம்தோறும் வாழ்வாதார நிதியாக ரூபாய் 10,000 வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசை வலியுறுத்துவதற்காக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த பட்டினிப் போராட்டத்தை முன்னெடுக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தனியார் பள்ளிகளின் தொடர் அங்கீகாரத்தையும் உடனடியாக எந்தவித நிர்ப்பந்தமும் நிபந்தனையும் இல்லாமல் மூன்றாண்டுகளுக்கு புதுப்பித்துத் தர வேண்டும், இந்த ஓராண்டுகாவது இ.பி.எஃப். இ.எஸ்.ஐ. சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.