சென்னை:Tamilnadu Police Dare operation: கொளத்தூர் மூர்த்தி நகர் வினாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர், ரவுடி பினு(51). இவர் மீது நான்கு கொலை வழக்கு, ஆயுத தடைச்சட்டம் உட்பட 19க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.
குறிப்பாக கடந்த 2018ஆம் ஆண்டு ரவுடி பினு, மாங்காடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளை அழைத்து அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த ரவுடி பினு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்பு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த பினு, கையெழுத்திடாமல் சுற்றித்திரிந்தபோது திருவள்ளூரில் வைத்து காவல் துறையினர் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதே போல கள்ளத்துப்பாக்கி விற்பதாக எழுந்த புகாரில் 2019ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த பினு, தொடர்ந்து காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளாக காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் தலைமறைவாக இருந்து வந்த ரவுடி பினு, சூளைமேட்டில் மாமூல் வசூலில் ஈடுபடுவதாக சூளைமேடு காவல் துறையினருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அப்பகுதியில் சோதனை செய்ததில் புழல் பகுதியில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சூளைமேடு காவல்துறையினர் ரவுடி பினுவை இன்று (ஜன.18) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ரவுடி பினுவை சூளைமேடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய ரவுடிகளை களையெடுக்க, பட்டியலிட்டு DARE ஆபரேஷனை சென்னை காவல் துறையினர் தொடங்கி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: எலி கடிப்பது போல் சீனா கொஞ்சம் கொஞ்சமாக கடிக்கிறது.. நரேந்திர மோடி பொய் சொல்கிறார்- சுப்பிரமணியன் சாமி