காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிவோருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள், தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் பதக்கங்கள், முதலமைச்சர் பதக்கங்கள், அத்திவரதர் வைபவ பாதுகாப்பு சிறப்புப் பதக்கங்கள் வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த விழாவில் கலந்துகொண்டு காவல் துறையினருக்கு பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார். மணல் கொள்ளை தடுப்பில் வீரமரணமடைந்த காவலரின் மனைவிக்கு ஐந்து லட்சம் ரூபாய், பதக்கத்தை முதலமைச்சர் வழங்கினார். தொடர்ந்து 500 காவல் துறையினருக்குப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர், "தமிழ்நாட்டில் காவல் துறையின் சிறப்பான பணியால் குற்றங்கள் குறைந்துவருகிறது. சட்ட ஒழுங்கை தமிழ்நாட்டில் காவல் துறை சிறப்பாக பேணிவருகிறது. சீன அதிபர் - இந்தியப் பிரதமர் வந்தபோது காவல் துறையினர் சிறப்பாக பணியாற்றினார்கள்.
2017ஆம் ஆண்டு காவல் துறை கொள்கை விளக்க குறிப்பை தவறு என எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். அவரது கூற்று தவறானது. அது மிகச் சரியாகத்தான் கொடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், செல்ஃபோன் பயன்பாடு, நெகிழித் தடுப்பு குறித்த மைம், தேசப்பற்று பாடல், யோகா, தற்காப்புக் கலை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் காவல் துறையின் மோப்ப நாய் பிரிவின் வீர சாகசம் நடந்தது. அதில் லியோ என்ற மோப்ப நாய் முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்தது பார்ப்போரை பரவசமடைய வைத்தது.
இதையும் படிங்க: மக்கள் நீதி மய்யம் கட்சியில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!