சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கரோனா பெருந்தொற்று ஒன்றிய அரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் கடந்தாண்டு(2020) மார்ச் 25 ஆம் தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.
மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, நோய்த் தொற்று பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டங்களில் உள்ள நோய்த்தொற்று பரவலின் அடிப்படையில், மாவட்டங்கள் மூன்றாக வகைப்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ள ஊரடங்கு, ஜூன் 28 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை ஜூலை 5 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிப்பு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
போக்குவரத்துக்கு அனுமதி
அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில், மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டத்திற்குள்ளும் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
கோயில்கள் செயல்பட அனுமதி
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கோயில்கள், மசூதிகள், தேவலாயங்கள், தர்காக்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். அர்ச்சனை, திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த அனுமதியில்லை.
கடற்கரைகளுக்குச் செல்ல அனுமதி
அனைத்து கடற்கரைகளிலும், காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சி செய்ய அனுமதிக்கப்படும்.
இதையும் படிக்கலாமே: மீண்டும் கோயில்கள் திறப்பா? - கூடுதல் தளர்வுகள் என்னென்ன? - முதலமைச்சர் ஆலோசனை