தமிழ்நாட்டில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட அளவில் அலுவலர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கு, வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆய்வு செய்யவும், அதனைப் பேரிடர் மேலாண்மையின் போது கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் மேலாண்மை செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸ் தாக்குதலை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் தொற்று நோய் பட்டியலில் சேர்த்து தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்துள்ளது. இதையடுத்து கொள்ளை நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர்கள், சுகாதார அலுவலர்களுக்குப் பல்வேறு அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அதில் முக்கியமாக நோய்த்தொற்று ஏற்பட்டவர் ஒத்துழைக்க மறுத்தால், அவரைக் கைது செய்தும் சிகிச்சை அளிக்க முடியும். குறிப்பிட்ட பகுதியில் நோய்த்தொற்று உறுதியானால் அந்தப் பகுதியில் சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறையின் உத்தரவுகளை மக்கள் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் கூடுதல், திருவிழாக்கள், குடும்ப விழாக்களை நடத்துவதற்கும் உள்ளாட்சித் துறையின் அனுமதியைப் பெற வேண்டும்.
நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் குறித்த விபரங்களை அரசுக்கு அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் உடனடியாக தெரிவிக்க வேண்டும். பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பவர்கள் மீது காவல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் உள்ளிட்ட பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்தச் சட்டத்தில் உள்ள விதிகளின் அடிப்படையில் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடவும் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.
மேலும் உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஏற்பட்ட கோவிட்-19 வைரஸ் பாதிப்புகள் 123 நாடுகளில் உள்ளது என அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு இந்த நோய் வராமல் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் வரும் அனைத்துப் பயணிகளுக்கும் இந்தியாவில் 30 விமான நிலையங்களில் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நான்கு விமான நிலையங்களில் தற்போது வரை 1 லட்சத்து 68 ஆயிரத்து 681 பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 1,601 பயணிகள் வீட்டில் 28 நாள்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மேலும் ரத்தப் பரிசோதனை மையத்தினை கூடுதலாக திறக்கவும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையும் படிங்க... கொரோனா பீதி: ரயிலில் பயணிகளுக்கு இச்சலுகைகள் இல்லையாம்!