சென்னை: 2004ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதிய திட்டமான தேசிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது பங்களிப்பு பென்சன் திட்டம் என்ற சிபிஎஸ் திட்டம் அமலில் உள்ளது.
இந்நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவது தொடர்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கு தமிழக அரசின் நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.
பங்களிப்பு பென்சன் திட்டத்தில் உத்தரவாதம் இல்லை என்பதும், பழைய ஓய்வூதிய திட்டப் பலன்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லை என்பதும் அரசு ஊழியர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, திமுக தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியில் இருந்த அரசு ஊழியர்கள், திமுக ஆட்சி அமைந்து இரண்டு வருடமான நிலையில், இன்னும் அதை அமல்படுத்தாமல் இருப்பதால் அதிருப்தி அடைந்தானர்.
இது தொடர்பாக அரசு அளித்த விளக்கங்களை ஏற்க மறுத்த ஊழியர்கள் மீண்டும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதையும் படிங்க: "பழசுக்கு புதுசு" - கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் மோசடி.. ஒருவர் கைது..