கரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 28,694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துவருகின்றன. இதனிடையே, கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனா நோய்த் தொற்றிற்கு கட்டணமில்லாமல் சிகிச்சைகள் அளிப்பது குறித்து தமிழ்நாடு அரசு ஜூன் 3ஆம் தேதி ஆணை வெளியிட்டது. கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை ஒழுங்குப்படுத்தக் கோரி இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, கட்டணம் குறித்த அறிக்கை ஒன்றை தமிழ்நாடு அரசிடம் சமர்பித்தது. இதனை ஆய்வுசெய்த அரசு கட்டணத்தை நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்தது.
பொது வார்டு முதல் அல்லது இரண்டாவது தர அறையில் அனுமதிக்கப்பட்டால், நாள் ஒன்றுக்கு 7,500 ரூபாய் வரையும், மூன்றாவது அல்லது நான்காவது தர அறையில் அனுமதிக்கப்பட்டால் 5,000 ரூபாய் வரையும் வசூலிக்கலாம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டால், நாள் ஒன்றுக்கு 15,000 ரூபாய் வரை வசூலிக்கலாம் எனவும் அரசு கூறியுள்ளது.