சென்னை: விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் ஆளுநர் ஆர். என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார். செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 14 ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பலர் கள்ளச் சாராயம் அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இதில் 15 பேர் இறந்தனர். மேலும் செங்கல்பட்டு மாவட்டம், பெருக்கரணை கிராமத்தில் 7 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்த துயரச் சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும் மருத்துவ செலவிற்காக ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் கள்ளச்சாராய இறப்புகள் தொடர்பாக செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிகழ்ந்த இந்த துயரமான சம்பவங்களுக்கு காரணமான தொழிலதிபர் இளையநம்பி உள்பட 13 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
அதே சமயம் நிர்வாக ரீதியாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
மேலும் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக தமிழகம் முழுவதும் இரண்டு நாளாக போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். இதில் தமிழகம் முழுவதும் 1,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,558 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கள்ளச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழப்பு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை அளிக்கக் கோரி தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதில் கள்ளச்சாராயம், விஷச்சாராயம் விற்பனையை தடுக்க தமிழக அரசு தவறியுள்ளது என வன்மையாக குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் உயிரிழப்பு குறித்து 4 வாரங்களில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்து தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
மேலும் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள்களை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளரிடம், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? இதுவரை எத்தனை பேர் கைது செய்தப்பட்டு உள்ளனர்? என்பது குறித்து தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி விரிவாக விளக்கம் கேட்டுள்ளார். இது தமிழக அரசுக்கு புதிய நெருக்கடியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ‘இனி கஷ்டம் வந்தால் கள்ளச்சாராயம் குடித்தால் போதும் ரூ.10 லட்சம் கிடைக்கும்’ - சீமான்