சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த 84 பாதுகாப்பு வீரர்களுக்கு கடந்த 23ஆம் தேதி கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த வாரம் 38 பேருக்கு கரோனா பரிசோதனை ஆளுநர் மாளிகையில் மேற்கொள்ளப்பட்டது. இதில், 35 பேருக்கு கரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது. மூன்று நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஆளுநர் மாளிகை வளாகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
ஆளுநர் மாளிகையின் மருத்துவ அலுவலர் ஆளுநருக்கு நேற்று (ஜூலை 28) வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அப்போது ஆளுநர் நலமாக இருப்பதாக தெரிவித்தார். இருப்பினும், ஆளுநரை ஏழு நாள் தனிமைப்படுத்தி இருக்குமாறு மருத்துவர் அறிவுரை வழங்கியுள்ளார். அதனையேற்ற தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை ஏழு நாள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
மேலும், தற்போதைய சூழ்நிலையை ஆளுநர் மாளிகை தொடர்ந்து உற்றுநோக்கி வருகிறது" என குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜெயலலிதாவின் இல்லம் அரசுடைமையானது - தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு