சென்னை: தலைமைச் செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2021 - 2022 ஆம் ஆண்டில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சிறப்பு பருவ பயிர்களான சம்பா நெல், பருத்தி, மக்காச்சோளம், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
481 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையினை 4 லட்சத்து 42 ஆயிரத்து 734 விவசாயிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக, 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் இறையன்பு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்மை இயக்குநர் அண்ணாதுரை, இப்கோ–டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் சிவராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இயற்கை பேரிடர்களால் பயிர்கள் பாதிக்கப்படும் நிலையை கருத்தில் கொண்டு, 2022-23ஆம் ஆண்டிலும் 2,057 கோடி ரூபாய் நிதியினை தமிழ்நாடு அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக நிதி ஒப்படைக்கப்பட்டு, இதுவரை 85,597 விவசாயிகளால் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலனுக்காக அரசு செயல்படுத்தி வரும் இத்திட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் பதிவு செய்து பலனடையும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு - அமைச்சர் பொன்முடி தகவல்