டிஜிட்டல் இந்தியா விருதுகள், புதுமையான டிஜிட்டல் தீர்வுகளை முன்னிறுத்தி அவற்றை அனைத்து அரசாங்க நிறுவனங்களும் பின்பற்றுவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்திய தேசிய இணையத்தில் நிறுவப்பட்டுள்ளன. சுகாதாரம், தொழிலாளர், நிதி, சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடையும் பொருட்டு, விரிவான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உபயோகிப்பதில் முன்னோடி முயற்சிகளை கொண்டிருக்கும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தினை இவ்விருதுகள் கௌரவிக்கின்றன.
நம்பிக்கை இணையம், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், பல்பொருள் இணையம், இயற்கை மொழி செயலாக்கம், குரல் பயனர்
இடைமுகம், பெரிய தரவு மற்றும் பகுப்பாய்வு, மெய்நிகர் உண்மை போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களும் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
இந்த ஆண்டு தமிழ்நாடு மாநிலம் “டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்” என்ற பிரிவில் “டிஜிட்டல் இந்தியா – 2020 தங்க விருதினை” பெற்றுள்ளது. சென்னை ராஜாஜி பவன் தேசிய தகவலியல் மையத்தில் (NIC) நடைபெற்ற டிஜிட்டல் இந்தியா - 2020 விருதுகள் மெய்நிகர் விழாவில் (virtual Ceremony) இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்து சமய அறநிலையத் துறையின் திருக்கோயில் மேலாண்மை திட்டம் (ITMS) குறித்த மென்பொருள் “முன்மாதிரியான தயாரிப்பு” என்ற பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு வழங்கிய “டிஜிட்டல் இந்தியா - 2020 வெள்ளி விருதினை” தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத் துறைக்கு காணொலி வாயிலாக வழங்கினார். அதனை அத்துறையின் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் மத்திய தொலைதொடர்பு, மின்னணு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், மத்திய அரசு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அஜய் பிரகாஷ் ஷானே, டெல்லி தேசிய தகவலியல் மைய தலைமை இயக்குநர் நீட்டா வர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் மற்றொரு நிகழ்வில், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ( 30.12.2020 ) சென்னை ராஜாஜி பவன் தேசிய தகவலியல் மையத்தில் ( NIC ) நடைபெற்ற டிஜிட்டல் இந்தியா - 2020 விருது மெய்நிகர் விழாவில் ( virtual Ceremony ) “ டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம் ” என்ற பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு “ டிஜிட்டல் இந்தியா - 2020 தங்க விருதினை வழங்கினார். இதனை தமிழ்நாடு அரசின் சார்பில் கூடுதல் தலைமைச் செயலர், தகவல் தொழில்நுட்பவியல் துறை, ஹன்ஸ் ராஜ் வர்மா பெற்றுக்கொண்டனர்.