சென்னை: தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் நேற்று (ஜன. 29) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தேர்தல் அட்டவணையினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஜன.26 அன்று வெளியிட்டது.
அதன்படி, தொடர்புடைய நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் நேற்று முன்தினம் (ஜன. 28) முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
உறுதிமொழி ஆவணத்தின்படி பதவி நீக்கம்
மேற்படி, பதவிமிடத்திற்கு தற்போது மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் அல்லது கிராம ஊராட்சித் தலைவராக பதவி வகிப்பவர்கள் தங்கள் பதவியினை உரியவாறு ராஜினாமா செய்யாமல் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நேர்ந்தால், அவர் போட்டியிடும் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அல்லது வெற்றி வாய்ப்பினை இழந்தாலும், அவர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்கின்ற உறுதிமொழி ஆவணத்தில் அவரது இருப்பிடம் குறித்து அளித்திருக்கும் உறுதிமொழியினை ஆவணமாகக் கொண்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் , 1994 , பிரிவு 38 ( 3 ) ( g ) அல்லது 43 ( 6 )-ன்படி , அவர் தற்போது தொடர்புடைய ஊராட்சிப் பகுதியில் வசிக்கவில்லை என உறுதி செய்யப்பட்டு , மேற்படி சட்டம் , பிரிவு 41 ( 1 )-ன்படி , அவரை தற்போது அவர் வகிக்கும் பதவியில் தகுதிநீக்கம் செய்யப்படும்.
ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.