தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஷ்ணுபிரசாத், ஜெயக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி, மேலிட பார்வையாளர் கே.வி.தாமஸ், காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவெல்ல பிரசாத் உள்ளிட்ட பலர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, "மோடி அரசு இந்தியாவை எப்படி சீரழித்துள்ளார்கள், மராட்டியத்தில் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்களிடத்தில் எடுத்துச் சொன்னோம். அதிகாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்படுகிறது. எட்டு மணிக்கு முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்றுக் கொள்கிறார். அவ்வளவு அவசரம் என்ன என்பதுதான் எங்களது கேள்வி.
எதற்காக ஆளுநர் அவ்வளவு அவசரம் காட்டினார். இதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன. ஆளுநர் என்பவர் வானளாவிய அதிகாரம் படைத்தவர் அல்ல. மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடியவரே. ஜனநாயகம் எப்படி கொலை செய்யப்படுகிறது என இந்திய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
உள்ளாட்சி என்பதே மக்களின் பங்களிப்புதான். மக்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு தேர்தல் நடக்கிறது என்றால் அந்தத் தேர்தலால் மக்களுக்கு எந்த நன்மையும் நிகழாது. மக்கள் சக்தியை ஒன்று திரட்டி எடப்பாடி அரசின் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்" என்றார்.
இதையும் படிங்க: 'காங்., என்.சி.பி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு எங்களுக்குதான்': ஆட்சியமைக்க உரிமை கோரிய சிவசேனா!