சென்னை: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணம் முடிந்து இன்று(மே.31) இரவு சென்னை திரும்புகிறார்.
இந்த நிலையில், தனது சிங்கப்பூர், ஜப்பான் பயணம் குறித்து ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "தொழில்துறை அமைச்சராகத் தன் பணியை சிறப்பாக நிறைவேற்றி, நிதியமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக ஏற்கனவே வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டபோது, 'அடுத்த முறை உங்கள் மாநில முதலமைச்சரை அழைத்து வாருங்கள்' என அங்குள்ளவர்கள் சொன்னதைத் தெரிவித்து, இந்தப் பயணம் குறித்து வலியுறுத்தியிருந்தார்.
தொழில்துறைக்குப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் இதனைக் குறிப்பிட்டுக் காட்டினார். சிங்கப்பூரின் போக்குவரத்துத் துறை அமைச்சரும் நண்பருமான ஈஸ்வரன் ஏற்கனவே எனக்கு அழைப்பு விடுத்திருந்ததும் நினைவுக்கு வந்தது.
இந்த நிலையில்தான் கடல் கடந்து, சிங்கப்பூர் - ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணச் சிறகுகளை விரித்தேன். 9 நாட்கள் வெளிநாட்டுப் பயணமா, இவ்வளவு நாட்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்ததில்லையே என நான் தயங்கினாலும், இந்தப் பயணம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது என்பதால் பயணச் சிறகுகள் விரிந்தன.
இந்த பயணத்தில், கடந்த மே 24 ஆம் தேதி தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக சிங்கப்பூரைச் சேர்ந்த மூன்று முக்கிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் தனித்தனியான சந்திப்பு நடைபெற்றது. டெமாசெக் நிறுவனத்தின் சேர்மனும் தலைமைச் செயல் அதிகாரியுமான தில்லான் பிள்ளை சந்திரசேகரா, செம்ப்கார்ப் நிறுவனத்தின் சேர்மனும் தலைமைச் செயல் அதிகாரியுமான கிம்யின் வாங், கேபிட்டாலேண்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சஞ்சீவ் தாஸ்குப்தா ஆகியோருடனான சந்திப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது, தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியில் அவர்கள் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்.
ஒசாகா பயணத்தில், டைசல் என்ற புகழ் பெற்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்த நிகழ்வாக, ஒசாகா முதலீட்டாளர்களுடனான கருத்தரங்கம் நடைபெற்றது. ஜப்பானிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில், உற்பத்தி சார்ந்த துறைகளில் நிறைய முதலீடுகளைச் செய்திருக்கின்றன. அதுபோல ஃபின்டெக் சிட்டி உள்ளிட்ட உள்கட்டமைப்பு சார்ந்த துறைகளிலும் முதலீடு செய்ய வேண்டும் என அவர்களிடம் தெரிவித்து, உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தேன்.
நூறாண்டுகளுக்கு முன்பு ஒரு விவசாயியால் தொடங்கப்பட்டது கோமாட்சு நிறுவனம். தன்னுடைய நிலத்திற்கேற்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கருவிகளை உருவாக்கத் தொடங்கி, இன்று உலகளவில் பெயர் பெற்றுள்ளது. ஒவ்வொரு இயந்திரமும் எப்படி தயாரிக்கப்படுகிறது, அதனுடைய உதிரி பாகங்கள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன, எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் பணி எப்படி நடைபெறுகிறது என்பதை எங்களுக்கு விளக்கினர். தமிழ்நாட்டில் ஒரகடத்தில் உள்ள கோமாட்சு நிறுவனத்தில் மாதந்தோறும் 300-க்கும் அதிகமான இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில் முதலீடு செய்ய வேண்டும் என ஒசாகாவில் உள்ள தலைமை நிறுவனத்தாரிடம் தெரிவித்து, முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தேன்.
ஒசாகா கோட்டைக்குள் ஜப்பானிய அரசர்கள் பற்றிய குறிப்புகள், மன்னர்களின் உடைகள், அவர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள், சந்தித்த போர்க்களங்கள், ராஜமுத்திரை பதித்த கடிதங்கள், எதிரிகளாலும் இயற்கைச் சீற்றத்தாலும் கோட்டை தாக்கப்பட்டு உருமாற்றங்கள் அடைந்த விவரம் எனப் பலவும் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. ஜப்பானைச் சுற்றிலும் கடல் என்பதால் பழங்காலத்திலேயே பிறநாடுகளுடன் வாணிபத் தொடர்பு இருந்துள்ளது.
கடந்த மே 29ஆம் தேதி ஜப்பானில் உள்ள தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் அரசு நிறுவனமான ‘ஜெட்ரோ’வின் சேர்மனை சந்தித்தேன். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும் நமது அரசின் முயற்சிகளையும் ஜெட்ரோ சேர்மன் பாராட்டினார். ஜப்பான் நிறுவனங்களுக்கும் அரசுக்கும் பாலமாக விளங்கும் ஜெட்ரோ நிறுவனத்தை முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைத்தேன்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ரூ.818.90 கோடியில் முதலீடு... 6 ஜப்பான் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
டோக்கியோ முதலீட்டாளர் கருத்தரங்கில் நான் பேசுகையில், 'உள்கட்டமைப்பு சார்ந்த துறைகளில் உங்கள் முதலீடுகளைச் செய்யுங்கள். அதுபோல ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சார்ந்த துறைகளுக்காக சென்னையில் உங்கள் நிறுவனங்களின் அலுவலகம் அமைய வேண்டும். எங்களிடம் மனித வளம் நிறைய உள்ளது' எனக் கேட்டுக்கொண்டு, முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தேன். மேலும், திங்கள் மாலையில் ஜப்பான் தொழில்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் நேரடிச் சந்திப்பு நடைபெற்று, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
நேற்றைய தினம் (மே 30) என்.இ.சி. எனப்படும் எதிர்காலத் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளின் முன்னணி நிறுவனத்தைப் பார்வையிடச் சென்றோம். அந்தமான் தீவுகள் உள்பட உலகின் பல நாடுகளிலும் கடலுக்கடியில் கேபிள் பதிக்கும் தொழில்நுட்பத்தையும் இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. புதிய தொழில்நுட்பங்கள் எந்தளவில் பயன்படுத்தப்படுகின்றன, எதிர்காலத்தில் அவை எந்தெந்த வகையில் உதவும் என்பதை என்.இ.சி. நிறுவனத்தினர் விளக்கிக் கூறினர்.
இந்தியாவில் ஐ.ஐ.டி. உள்ளிட்ட நிறுவனங்கள் ஜப்பானின் என்.இ.சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கு இத்தகைய திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க என்.இ.சி. முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். இந்தியாவில் உள்ள தங்கள் அலுவலகத்துடன் இதுகுறித்துப் பேசி, நல்ல முடிவைத் தெரிவிப்பதாக என்.இ.சி. நிறுவனத்தினர் கூறினர். நேற்று மாலையில் ஓம்ரான் என்ற நிறுவனத்துடன் சந்திப்பு நடந்தது. மருத்துவப் பரிசோதனைகள் சார்ந்த கருவிகள் தயாரிக்கும் நிறுவனமான ஓம்ரான், இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழ்நாட்டின் மீதும் – தமிழ்நாடு அரசின் மீதும் - தமிழ்நாட்டு மக்களின் மீதும் மிகப்பெரிய நம்பிக்கையை ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டில் ஜனவரி 2024-ல் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அனைவரையும் அழைத்திருக்கிறேன். கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சி போலன்றித் தமிழ்நாடு மாறியிருக்கிறது, தமிழ்நாடு அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது என்ற நம்பிக்கையை தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்திய மனமகிழ்வுடன், வெற்றிகரமாக சென்னை திரும்புகிறேன்.
உடன் பிறப்புகளின் முகம் காண நான் ஆவலுடன் இருக்கிறேன். நமக்கான பணிகள் காத்திருக்கின்றன. கலைஞரின் நூற்றாண்டை சிறப்பாகக் கொண்டாடுவோம். அவர் உருவாக்கிய நவீனத் தமிழ்நாட்டை, முதன்மை மாநிலமாக உயர்த்திக் காட்டுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.