வரும் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவித்தார். அதற்கு நன்றி கூறும்விதமாக பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று சந்தித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒரு மாதமாக அதிமுகவில் பரபரப்பு காணப்பட்டது. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்குச் சரியான பதில் அதிமுகவிடம் இல்லாததே இக்குழப்பத்திற்கு காரணமாக கருதப்பட்டது. அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற அன்று, அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்படுவார் எனத் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் சில கோரிக்கைகளை முன்வைத்ததால், முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், நேற்று 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின்படி இன்று காலை 'அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி' என அறிவிப்பு வெளியானது.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை பசுமை வழிச்சாலையில் உள்ள துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று சந்தித்துப் பேசினார். பழனிசாமி - பன்னீர்செல்வம் வீடு அருகே அருகே என்றாலும் நேற்று பேச்சுவார்த்தை, ஆலோசனையின்போது இருவரும் நேரில் சந்திக்காமல் அதிமுக மூத்த அமைச்சர்கள் இருவர் வீட்டிற்கும் மாறி மாறி சென்றுவந்தனர்.
இந்நிலையில் இன்று முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
இதையும் படிங்க:”2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக உடன்கூட கூட்டணி அமையலாம்” - பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடி!