தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பது தொடர்பாகடி.வி. சோமநாதன் குழு சமர்ப்பித்த அறிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவுடன் தற்போது நடைபெற்றுவரும் பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார். மேலும் நில அளவீடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கை அடிப்படையில் சோமநாதன் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.
கரோனா பாதிப்பு முடிந்த பின்னர் நில அளவீடுகள் தொடர்பாகவும் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலர் க. சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர், தொழில் துறை முதன்மைச் செயலர் உள்ளிட்ட பல துறைசார்ந்த செயலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.