சினிமா டிக்கெட்டுகளை ஆன்லைனில் விற்பது தொடர்பாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் உள்துறை கூடுதல் செயலாளர் நிரஞ்சன் மார்டி, செய்தித்துறை இயக்குநர் ஷங்கர், சினிமா தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், திரைப்படத் தயாரிப்பாளர்கள் வைத்த பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனையை எந்த முறையில் நடைமுறைப்படுத்துவது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் அவர், ஒரு வாரத்தில் மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு இதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றும் 977 திரையரங்குகளிலும் எத்தனை காட்சிகள் உள்ளன, எத்தனை நபர்கள் படம் பார்த்துள்ளனர் என்பதை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும்; திரையரங்குகளில் டிக்கெட் பெற்றுக்கொள்ளும் வசதி தொடரும் என்றும் அதனை கணினி மூலம் அரசு தெரிந்துகொள்ளும் வாய்ப்பு உருவாக்கப்படும் எனவும் கூறினார்.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் பாரதிராஜா, ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்வதை ஒளிவு மறைவு இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதாகவும், அதற்கு நன்றி தெரிவிக்கவே வந்ததாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய திரைப்படத் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும், பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யத் தயாராக இருக்கிறோம். பொதுமக்கள் விரும்புவது போல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். தனியார் மொபைல் செயலிகளின் உரிமையாளர்களையும் அழைத்து வரி தொடர்பாக ஆலோசனை நடத்த இருக்கிறோம் என்றார்.