தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர், அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
மேலும் அந்தந்த மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பல்வேறு துறைகளின் சார்பில், அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். அதேசமயம் மாவட்டத்தில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு வருகிறார். இதுவரை 24 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆய்வுப் பணியை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் நாளை (செப்டம்பர் 22) முற்பகல் ராமநாதபுரம் மாவட்டத்திலும் பிற்பகல் தூத்துக்குடி மாவட்டத்திலும், செப்டம்பர் 23-ஆம் தேதியன்று முற்பகல் கன்னியாகுமரி மாவட்டத்திலும், பிற்பகல் விருதுநகர் மாவட்டத்திலும் ஆய்வுக்கூட்டம் நடத்திட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அன்று பிரதமர் மாநில முதலமைச்சர்கள் உடன் காணொலி மூலம் கலந்தாய்வுக்கூட்டம் நடத்தவுள்ளதால், அதில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ள வேண்டி உள்ளது.
எனவே, முதலமைச்சர் சுற்றுப்பயண நிகழ்ச்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 22ஆம் தேதி நாளை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் மட்டும் முதலமைச்சர் பங்கேற்கிறார். அதேநாளில் பிற்பகல் தூத்துக்குடி மாவட்டத்திலும், செப்டம்பர் 22ஆம் தேதியன்று கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற இருந்த ஆய்வுக்கூட்ட நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட மாவட்டங்களில் ஆய்வு நடைபெறுவது குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும். அதேசமயம் முதலமைச்சர் இன்று (செப் 21) சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றடைந்து மதுரையில் தங்குகிறார். நாளை(செப் 22) காலை மதுரையிலிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அன்று மாலை மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்