சென்னை: தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் (ஆவின்) பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 47 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இன்று (ஆக 21) பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதையடுத்து, துணைப்பதிவாளர் (பால்வளம்) அலுவலகத்தில் பணிபுரிந்த காலத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கும், அவர்களது கல்வித் தகுதியின் அடிப்படையிலும், கருணை அடிப்படையிலும் பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
வணிக ஒப்பந்தம்
கடந்த ஆண்டுகளிலிருந்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமானது, பால் மற்றும் பால் பொருட்களை முகவர்கள் மூலமாக சிங்கப்பூர், ஹாங்காங், கத்தார் போன்ற மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால் குறிப்பிடும்படியான வளர்ச்சி ஏற்படவில்லை.
பால் மற்றும் பால் உபபொருட்களை நுகர்வோர்களுக்கு ஏற்ற வகையில் தயாரித்து, அதனை ஆந்திரா, தெலங்கானா போன்ற வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யவும்; ஐக்கிய அரபு நாடுகள் (United Arab Emirates) - துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மன், ஓமன், கத்தார், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலமாக வருடத்திற்கு சுமார் 60 கோடி ரூபாய் அளவில் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சுமார் 6 கோடி ரூபாய்வரை லாபம் ஈட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஆவின் விற்பனையை உலகமெங்கும் விரிவுபடுத்தும் நோக்கில் முதல்கட்டமாக வெளிமாநிலங்கள், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, முதல்கட்டமாக 5 மொத்த விற்பனையாளர்கள் தேர்வு செய்து, அவர்களுக்கு வணிக ஒப்பந்தத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
பேரறிஞர் அண்ணா பால் உற்பத்தியாளர்கள் நலத்திட்டம்
இத்திட்டமானது, தொடக்க பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினர்கள் தொடர்ந்து சங்கத்திற்கு பால் வழங்க இயலாத நிலை ஏற்படும்போது, அவர்கள் தொடர்ந்து சங்கத்திற்கு பால் வழங்கவும், அவர்களின் விசுவாசத்தை தக்க வைக்கவும் ஏற்படுத்தப்பட்டது.
பேரறிஞர் அண்ணா பால் உற்பத்தியாளர்கள் நலநிதித் திட்டத்தின் கீழ் விபத்தினால் உயிரிழந்த பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ. 2.50 இலட்சம், கல்வி உதவித்தொகை ரூ.25,000, திருமண உதவித்தொகை ரூ.30,000, விபத்தினால் உயிரிழந்த பால் உற்பத்தியாளர்களின் ஈமச்சடங்குக்கு ரூ. 5,000 என, 44 பயனாளிகளுக்கு ரூ.1,04,25,833 மதிப்பிலான காசோலைகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பால் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை அமைச்சர் சா.மு.நாசர், அரசு தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி.க.ஜவஹர், பால்வளத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் நிர்வாக இயக்குநர் க.சு.கந்தசாமி, உள்பட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: செப்டம்பரில் பள்ளிகள் திறப்பது உறுதி - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி