சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல் 18) அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்க கூடிய வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் எனப் பேசினர்.
இதற்குப் பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "ஒன்றிய அரசு அணைகள் பாதுகாப்புச் சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இந்தச்சட்டத்தின்கீழ் நாட்டில் உள்ள அனைத்து அணைகளும் அடங்கும். இதன்மூலம் அனைத்து அணைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த அணைகளை கண்காணிப்பதற்கு, மேற்பார்வை குழுவில் மாநில அரசுகள் உறுப்பினராக கொண்ட குழு அமைக்க உள்ளதாகவும் அந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது. அந்த குழுவில் தமிழ்நாடு அரசும் இணைந்து செயல்படும். இந்த சட்டத்தை அமல்படுத்த ஓராண்டு காலம் ஆகும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் உரிமை விட்டுக்கொடுக்கப்பட மாட்டாது. தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்படும். இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுநருக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் ஏதுமில்லை - சட்டப்பேரவையில் ஸ்டாலின்!