பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 16ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதையடுத்து உயர் கல்வி சேர்க்கைக்கான பணிகள் தொடங்கியுள்ளன. பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் 116 கலை அறிவியல் கல்லூரிகள், 139 அரசு நிதி உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், 571 தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு நாளை (20.07.20) முதல் தொடங்குகிறது.
ஜூலை 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக மாணவர்கள் பதிவு செய்யலாம். அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வழங்கக் கூடாது என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், "மாணவர்களிடமிருந்து ஆன்லைன் வழியில் விண்ணப்பங்களை பெற்று பிறகு தரவரிசை மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்.
இளங்கலை தமிழ் பாடப் பிரிவு மாணவர்கள் கேட்டால், 12ஆம் வகுப்பில் தமிழ் பாடத்தில் எடுத்த மதிப்பின் அடிப்படையில் தரவரிசை தயாரிக்க வேண்டும். இளங்கலை ஆங்கிலம் கேட்டால் 12ஆம் வகுப்பில் ஆங்கில பாடத்தில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை தயாரிக்கப்பட வேண்டும்.
இதர பாடப்பிரிவுகளை கேட்டால் மொழிப்பாடங்கள் தவிர்த்து இதர பாடங்களில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலை தயாரித்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். தனியார் கல்லூரிகளில் சேர வேண்டுமெனில் அந்தந்த கல்லூரி இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு கல்லூரிகளை பொருத்தவரை, www.tngasa.in, www.tndceonline.org ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக 48 ரூபாயும், பதிவு கட்டணமாக 2 ரூபாயும் செலுத்த வேண்டும். இந்தாண்டு மாணவர்கள் அதிக அளவில் விண்ணப்பித்தால் அதற்கேற்ப ஏற்கெனவே கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுடன், கூடுதலாக இடங்களும் ஒதுக்கீடு செய்து தரப்படும்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாருங்கள் பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் - வரலாற்றை கலை வழியாக நினைவூட்டும் மாணவர்