சென்னை:தமிழ் பேரரசுக் கட்சியின் தலைவரும், இயக்குநருமான கௌதமன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு சாதகமானவை.
சிறு குறு விவசாயிகளை முற்றிலும் அழித்து நமது விவசாய மண்ணை அபகரித்து விவசாயிகளை கூலி ஆள்களாக மாற்றும் ஒரு கொடூரத்திற்கு அது வழிவகுக்கும். அனைத்து மாநில அரசுகளும் சட்டப்பேரவைகளைக் கூட்டி இந்த வேளாண் சட்டங்கள் எங்கள் மாநிலத்திற்கு தேவையில்லை என்று தூக்கி எறிய வேண்டும்.
ஆனால், இதை தமிழ்நாடு அரசு செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ஒன்றிய அரசு எதை கூறினாலும் அதை முதல் ஆளாக செய்யக்கூடிய அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது. இந்த வேளான் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகள் போராடிவருகின்றனர்.
இந்தப் போராட்டங்களை திசை திருப்பவே உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டு பட்டியல் சமூக பெண்ணை ஈவு இரக்கமின்றி கற்பழித்து கொலை செய்து எரித்து நாடகம் ஆடுகிறது. பெண்களை பாலியல் வன்கொடுமை செய்கிற முதல் மாநிலமாக உத்தரப் பிரதேசமும், இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.
வேளாண் திருத்தச் சட்டம், புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க வரைவு இவையெல்லாம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்று மாநில அரசு தூக்கி எறிய வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் மக்களை காக்க மக்கள் ஆட்சி செய்யவேண்டும். திருமாவளவன், ராமதாஸ், தினகரன், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த மண்ணை காக்க வேண்டுமென்றால் கௌரவத்தை தூக்கிப் போட்டுவிட்டு ஒன்றிணைந்து நிற்க வேண்டும்.
இந்த மண்ணின் உரிமைகளையும், மக்களையும் காக்க வேண்டும் என்றால் இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் முடியும் இல்லையென்றால் இந்த நாடு சுடுகாடாகதான் போகும்" என்றார்.
இதையும் படிங்க: பேரன் பேத்தியோடு விளையாடுங்கள் - ரஜினிக்கு சீமான் அட்வைஸ்!