சென்னை பல்லவன் சாலையில் உள்ள 24 மணி நேரமும் இயங்கும் கரோனா பரிசோதனை செய்யும் மையத்தை, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் கரோனா தடுப்பு சிறப்பு மேற்பார்வை அலுவலரும், வணிக வரித்துறை முதன்மை செயலாளருமான சித்திக் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதன் பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சித்திக், ’சென்னையில் 14 பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. கிட்டத்தட்ட 70 விழுக்காடு தொற்று பாதிப்பாளர்கள் வீட்டு தனிமையில் இருக்கின்றனர். ஓமந்தூரார், ராஜீவ் காந்தி இருமருத்துவமனைகளும் இணைந்து பல்லவன் சாலை பரிசோதனை மையத்தை உருவாக்கி உள்ளனர்.
மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளில் அறிகுறியுடைய, அவசர சிகிச்சை தேவைப்படாத நோயாளிகளை பரிசோதனைக்காக இங்கு அனுப்பி வைப்பர். நாள் ஒன்றுக்கு இங்கு ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள இயலும். ஏற்கனவே சென்னையில் 14 பரிசோதனை மையம் உள்ள நிலையில், மேலும் பல்லவன் சாலையையும் சேர்த்து 7 பரிசோதனை மையத்தை உருவாக்க உள்ளோம்.
வரும் நாட்களில் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் இது போன்ற கூடுதல் பரிசோதனை நிலையங்களை ஏற்படுத்துகிறோம். 280-இல் இருந்து 350ஆக அவசர ஊர்திகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல்லவன் சாலை பரிசோதனை மையம் 24 மணி நேரமும் வாரத்தில் 7 நாட்களும் இயங்கும்’என்றார்.
தொடர்ந்து பேசிய ஆணையர் பிரகாஷ்,’சென்னையில் தற்போது 619 முன்கள பணியாளர்கள் சிகிச்சையில் உள்ளனர். 90 விழுக்காடு முன்கள பணியாளர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். மொத்தம் 70 ஆயிரம் முன்கள பணியாளர்கள் பணியில் இருக்கின்றனர். ஊடகவியலாளர்களில் தேர்தலுக்காக பரிசோதனை மேற்கொண்ட 150 நபர்களில் ஒருவருக்கு மட்டுமே கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர முடியும்.
மாநகராட்சி பதிவேட்டின்படி, 26 முன்கள பணியாளர்கள் முதல் அலையில் உயிரிழந்துள்ளனர். காவல் துறையில் 3 நபர்கள் தற்போது இரண்டாம் அலையில் உயிரிழந்துள்ளனர். 5,795 வாக்குச்சாவடி முகவர்கள், ஊடகத்தைச் சேர்ந்த 400 பேர், 2 ஆயிரம் காவலர்கள், முன்கள பணியாளர்கள் 1050 தேர்தல் பணியில் நாளை ஈடுபட உள்ளனர்.
குறைவான அளவில் முகவர்களை அனுப்புமாறு அரசியல் கட்சியின் வேட்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தோம். அதை ஏற்று பல சுயேட்சை வேட்பாளர்கள் முகவர்களை அனுப்பவில்லை. குறைந்தபட்சம் தி.நகரில் 14 மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை முடியும். ஏறக்குறைய 6000 வாக்குச் சாவடி மையங்கள் சென்னையில் இருக்கின்றன. கொத்தூரில் முடிவுகள் வெளிவர 20 மணி நேரம் வரை ஆகலாம். அதை குறைக்க முயற்சி எடுப்போம்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அதை மீறினால் முதலில் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதே நிலை தொடர்ந்தால் கரோனா பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு வந்து சேர்க்கப்படும்"எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய நாராயண பாபு (மருத்துவக் கல்வி இயக்குநர்),’அரசு மருத்துவமனைகளில் 100 விழுக்காடு ரெம்டெசிவிர் இருப்பு இருக்கிறது. தனியாரிடம் மட்டுமே தட்டுப்பாடு இருக்கிறது. ரெம்டெசிவிர் மட்டுமே கரோனாவிற்கு தீர்வு அல்ல. அவசர சிகிச்சையில் இருப்போருக்கு மட்டுமே அது தேவைப்படும். 1, 200 ஆக்சிஜன் படுக்கைகள் சென்னையில் தற்போது பயன்பாட்டில் உள்ளன. 6000 ஆக்சிஜன் படுக்கைகள்தயார் செய்யபட்டு வருகின்றனர்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:'ரெம்டெசிவிர் மருந்து பதுக்கலுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை'