சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 12 ஆயிரத்து 838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையினை ஜனவரி 26ஆம் தேதி அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள், 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான மனு தாக்கல், ஜனவரி 26ஆம் தேதி தொடங்கியது. இதில் நேற்று (பிப்.3) வரை மொத்தமாக, 10 ஆயிரத்து 153 மனுக்கள் பெறப்பட்டன.
இந்நிலையில், மனு தாக்கல் செய்வதற்கு இன்று (பிப்.4) கடைசி நாள் என்பதால், ஏராளமானவர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். கடைசி நேரத்தில் வந்தவர்களுக்கும், வாய்ப்பளிக்கும் வகையில் 'டோக்கன்' கொடுத்து மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்கள் பரிசீலனை நாளை (பிப். 5) நடைபெறவுள்ளது.
மனுக்களை திரும்பப் பெறுவதற்கு, 7ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
தற்போது வரை மாநகராட்சி தேர்தலுக்கு 6,818 பேரும், நகராட்சி தேர்தலுக்கு 12,171 பேரும், பேரூராட்சி தேர்தலுக்கு 20,847 பேரும் மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.