சென்னை: சட்டப்பேரவையில் இன்று (செப்.1) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தின் முடிவில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலுரை வழங்கினார்.
அதில், 'ஒன்றிய அரசின் அன்னை இந்திரா தொகுப்பு வீடு திட்டத்துக்கு வித்திட்டவர், கருணாநிதி. இந்த நிதியாண்டில் 7 ஆயிரத்து 500 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சிதிலமடைந்துள்ள வீடுகள் புதுப்பிக்கப்படும்.
60 ஆண்டு கால கட்டடம் உறுதியாக இருக்கும் வகையில், தனியாருக்கு நிகராக கட்டடங்கள் கட்டப்பட்டு ஏழை மக்களுக்கு வழங்கப்படும்.
மதுரையில் 2011இல் கட்டப்பட்ட இரண்டாயிரம் வீடுகள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. காஞ்சிபுரத்தில் 2 ஆயிரத்து 112 வீடுகள் கட்டப்பட்டு, அதுவும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
புதுக்கோட்டை நரிமேடுப் பகுதியில் 1 ஆயிரத்து 920 வீடுகள் கட்டப்பட்டு, இதில் யாரும் இதுவரை குடியமர்த்தப்படவில்லை.
சென்னையில் 30 ஆயிரத்து 392 வீடுகள் கட்டப்பட்டு, இது அனைத்தும் தற்பொழுது பயன்பாடின்றி சிதலமடைந்துள்ளது.
இந்த அனைத்து வீடுகளிலும் ஏழை, எளிய மக்கள் விரைவில் குடியமர்த்தப்படுவார்கள்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : புளியந்தோப்பு விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை